Saturday 30 November 2013

மனதுக்குள் நீந்தும் மீன்கள்

இரையிடும்
ஒவ்வொரு வேளையும்
துள்ளிக் குதித்து
வாய்திறந்து வரவேற்கின்றன
கண்ணாடி நீரின் வண்ண மீன்கள்.

நீரூற்றும்
ஒவ்வொரு நாளும்
காற்றிலசைந்து
தளிர்களாய்ச் சிரிக்கின்றன
இல்லத்தை அலங்கரிக்கும்
தொட்டிச் செடிகள்.

அருகில் வரும்
ஒவ்வொரு முறையும்
உடலுதறி எழுந்து
கனிந்து உறவாடுகின்றன
காவலிருக்கும் செல்லப்பிராணிகள் .

வாகனப் பயணத்தின்
ஒவ்வொரு நேரமும்
சிறகடித்து 
ஒலியெழுப்புகின்றன
கிளைகளிலிருக்கும் சிநேகக் குருவிகள்.

நேரெதிரில் கண்டு
புன்னகைக்கவோ கைகுலுக்கவோ
வாய்ப்பிருந்தும்
முகம்திருப்பி விலகிச்செல்லும் 
நண்பர்களை நினைத்து
சிரித்துக்கொள்கின்றன
மனதுக்குள் நீந்தும் மீன்கள்.

என் பண்டிகையின் நாட்குறிப்பிலிருந்து....

ஒவ்வொரு பண்டிகையிலும்
அப்பா
குதூகலமாய் இருப்பார்.

தனித்தனி கூடுகளில் இருப்பவர்கள்
தாய்க்கூட்டிற்கு
வருவதை எதிர்பார்த்து
வாஞ்சையோடு வாசலில் நிற்பார்.

ஒன்றாய் அமர்ந்து உண்ணும்போது
உற்சாகமாயிருப்பார்.

பிள்ளைகள்
புத்தாடை அணிந்து  பவணி வருவதை
பெருமையோடு பார்ப்பார்.

குடும்ப மாநாட்டுத் தலைமையேற்று 
குழந்தையைப் போல் துள்ளுவார்.

பெரிய குறும்புகளையும்
பொறுமையோடு ரசிப்பார்.

சாதாரன நகைச்சுவைக்கும்
சத்தம்போட்டுச் சிரிப்பார்.

கார் வாங்கிய சேதி சொன்னால்
கர்வத்தோடு
அம்மாவைப் பார்ப்பார் .

இந்த நாள் நீளாதா
என்று ஏங்குவார்.

அடுத்த பண்டிகை வரை
அந்த நாளைப் பற்றியே
அம்மாவிடம் பேசுவார்.

அப்பாவை நினைத்தபடி
வாசல்படியில் அமர்ந்திருந்தேன்---
என்
பிள்ளைகள் வருகைக்காக.